தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தில் பங்கேற்காததால் தம்பியை குத்திக்கொன்ற தேங்காய் வியாபாரி கைது

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தில் பங்கேற்காததால் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற தேங்காய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-04 18:45 GMT

கிணத்துக்கடவு

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தில் பங்கேற்காததால் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற தேங்காய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார்பில் கூறப்படுவதாவது:-

தேங்காய் வியாபாரம்

ேகாவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42).இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி குழந்தைகளும் இவர்களை விட்டு பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் இவர்கள் மட்டும் வடபுதூரில் தனித்தனி வீட்டில் அருகருகே வசித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு மகாலிங்கத்தின் தங்க நகை அடகு வைத்து இருவரும் ஒன்றாக தேங்காய் வியாபாரம் செய்து வந்தனர். தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுச்சாமி லாபத்தில் மட்டும்தான் பங்கு வேண்டும், நஷ்டத்தில் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

தம்பிக்கு கத்திக்குத்து

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஆறுச்சாமி கிரிக்கெட் மட்டையால் அண்ணன் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் இடுப்பில் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து தம்பி ஆறுச்சாமியை குத்த முயன்றார். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை துரத்திச்சென்று வடபுதூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்து ஆறுச்சாமியை கத்தியால் வயிறு மற்றும் மார்பு பகுதியில் குத்துவிட்டு மகாலிங்கம் தப்பிச்சென்றார்.

அண்ணன் கைது

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆறுச்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் ஆறுச்சாமியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆறுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மகாலிங்கத்தை கைது செய்தனர். வியாபார நஷ்டத்தில் தம்பியை அண்ணனே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்