அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும்

சோளிங்கர் நகராட்சி சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-10-18 17:45 GMT

சோளிங்கர் நகராட்சி சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சோளிங்கர் நகராட்சி கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும், துணைத்தலைவர் பழனி, ஆணையர் கன்னியப்பன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில், 8-வது வார்டு உறுப்பினர் கோபால் பேசியதாவது:-

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மயானங்களுக்கு ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், மின்விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மயானத்தை அளவீடு செய்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட 8,11-வது வார்டு பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காலி மனைகள் உள்ளன. இதில் புதர் மண்டிக்கிடப்பதால் பாம்பு மற்றும் விஷம் பூச்சிகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வப்போது பாதிக்கப்படுவதால் மனையில் உள்ள புதரை மனை உரிமையாளர் அகற்ற அறிவுறுத்த வேண்டும். அல்லது நகராட்சி நிர்வாகமே புதர்களை அகற்றி அதற்கு உண்டான செலவீனங்களை மனை உரிமையாளரிடம் வசூலிக்க வேண்டும்.

அப்பங்கார குளக்கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதி சுற்றுச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோளிங்கர் பெரிய ஏரி நிரம்பி உள்ளது. ஏரியின் கீழ் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு ஏரி தண்ணீர் பயன்படும் விதமாக ஏரி கால்வாய்களை தூர்வார நீர்வளத்துறைக்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி மையம்

5-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயன் பேசுகையில், சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் பயன்படும் வகையில் நகராட்சி சார்பில் 'நீட்' தேர்வுக்கும், அரசு பணி தேர்வுகளுக்கும் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்,

சோளிங்கர் பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக நந்தி ஆற்றில் விடுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. செய்லபடாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனாடியாக செயல்படுத்த வேண்டும்.

பில்லாஞ்சி-சோமசமுத்திரம் கூட்டு சாலை பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, கூட்டு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். பில்லாஞ்சி குளக்கரை தெருக்கள் சேதமடைந்தது உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல வார்டு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். கூட்ட முடிவில் நகரமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தெறிவித்தார்.

கூட்டத்தில் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்