திட்டக்குடி அருகே காருக்குள் சிக்கி தவித்த 1½ வயது குழந்தை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு
திட்டக்குடி அருகே காருக்குள் சிக்கி தவித்த 1½ வயது குழந்தை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப் பட்டது.
திட்டக்குடி,
காரில் விளையாடிய குழந்தை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு பாலாஜி என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.
அப்போது கொளஞ்சியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நேரு என்பவர் தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குழந்தை பாலாஜி காருக்குள் ஏறி விளையாடியது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
அப்போது நேரு கவனிக்காமல் காரிலேயே சாவியை வைத்து விட்டு, கார் கதவை பூட்டிச்சென்றார். இதனிடையே கொளஞ்சி-ரேவதி தம்பதியினர் குழந்தையை காணாமல் பதறினர். அந்த தெருவில் தேடியபோது, காருக்குள் இருந்த குழந்தை அழுதுகொண்டிருந்தது.
உடனே குழந்தையை மீட்க கார் கதவை திறக்க முயன்றனர். ஆனால் அதனை திறக்க முடியவில்லை. இதையடுத்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டார். உடனே அவர், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாவகமாக கார் கதவை திறந்தார். இதையடுத்து குழந்தையை மீட்ட தம்பதி கட்டித்தழுவி, ஆனந்த கண்ணீர் விட்டனர்.