வி.கைகாட்டி:
ஸ்கூட்டரில் சென்றனர்
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் ஆதித்யா(வயது 17). இவர் அரியலூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது உறவினர் திருச்சி மாவட்டம் கல்லக்குடி மேலத்தெருவை சேர்ந்த இளவரசன் மகன் சந்தோஷ்(17).
நேற்று ஒரு ஸ்கூட்டரில் ஆதித்யா, சந்தோஷ் ஆகியோர், ஆதித்யாவின் சித்தப்பா மகன் மித்ரனுடன்(3) ரெட்டிபாளையம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட சென்றனர்.
குழந்தை சாவு
மயிலாண்டகோட்டை கிராமத்தை கடந்தபோது ஸ்கூட்டரில் இருந்து மித்ரன் தவறி விழ முயன்றதாகவும், அவனை பிடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டருடன் 3 பேரும் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே குழந்தை மித்ரன் பரிதாபமாக இறந்தது. மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.