எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்து கொன்ற பூனை

பெரம்பலூர் அருகே எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை வளர்ப்பு பூனை கடித்து கொன்றது.;

Update: 2022-11-20 18:30 GMT

விவசாயி

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55), விவசாயி. இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். விடுமுறை நாளான நேற்று சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய முயன்றது.

இதனை கண்ட சிவக்குமாரின் வளர்ப்பு பூனை, பாம்புடன் நீண்ட நேரம் சண்டையிட்டது. இந்த சத்தத்தை கேட்டு சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது போக்கு காட்டிய பாம்பின் தலையை பூனை கவ்வி பிடித்து, கடித்து கொன்று தூக்கி சென்றது.

கட்டு விரியன் பாம்பு

கடிபட்டு இறந்த பாம்பு அதிக விஷத்தன்மை உடைய கட்டு விரியன் வகையை சேர்ந்தது. வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய வளர்ப்பு பூனை குறித்து தகவலறிந்த அக்கம், பக்கத்தினர் ஆர்வமாக வந்து பூனையை பார்த்து சென்றனர். பின்னர் பூனையிடம் கடிப்பட்டு இறந்த கட்டு விரியன் பாம்பு குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்