பணத்தை திருப்பிக்கேட்ட ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
பணத்தை திருப்பிக்கேட்ட ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜீயபுரம்:
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் விஜயேந்திரன்(வயது 50). இவர் அல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகன் மணிகண்டனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, அல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சீனிவாசன் கூறியுள்ளார். இதற்காக அவர், விஜயேந்திரனிடம் ரூ.5 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜயேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.3 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். மீதி பணத்தை அரசு வேலை கிடைத்தவுடன் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் சீனிவாசன் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயேந்திரன் சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவருக்கு, சீனிவாசன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசில் விஜயேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சீனிவாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.