சாமியார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரு.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-09-05 18:45 GMT

நாகர்கோவில்:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரு.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.

சாமியாருக்கு எதிர்ப்பு

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவித்திருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தநிலையில் அந்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. இளைஞர் அணியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் மனு கொடுத்து வருகிறார்கள். இதேபோல குமரி மாவட்டத்திலும் சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா மீது போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது.

தி.மு.க. புகார்

நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் நேற்று தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன் தலைமையில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர் உள்ளிட்டோர் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் வெட்டி, அவரது தலைக்கு ரு.10 கோடி என்று அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக பதவி வகிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்து, பேச்சை தவறாக திரித்து மக்களிடையே பரப்புவதாலும், மிரட்டுவதாலும் சமுதாயத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு மக்களிடையே மதரீதியாக பிளவை ஏற்படுத்தவும் அவர் முயற்சிக்கிறார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்.காலித் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இரும்பு வாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல், அவருடைய தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா பொதுவெளியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்