பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

உசிலம்பட்டி அருகே பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-06-06 20:40 GMT

மதுரை, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூதிப்புரத்தைச் சேர்ந்த அய்யாவு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் ஊரில் பழமையான கள்ளர் பள்ளிக்கூடம் உள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சமீபத்தில் இந்த பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டனர். அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேக்கு மர பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

பள்ளிக்கட்டிடத்தை சமுதாய கூடமாக பயன்படுத்த கிராமத்தினர் விரும்பிய நிலையில், அந்த கட்டிடத்தை ஊராட்சித்தலைவர் தன்னிச்சையாக இடித்துள்ளார். எனவே, பள்ளிக்கூடத்தை இடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அங்கு புதிதாக கட்டிடம் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் இது சம்பந்தமாக இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை அங்கு புதிதாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்