பற்களை பிடுங்கிய வழக்கு; சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் -டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துவரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் பாய்ந்தது. மேலும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
இந்நிலையில் இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு, இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தன.
அதை ஏற்று இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார். உடனடியாக இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்று நடத்த உள்ளனர்.