எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுதானதால் இழப்பீடு கேட்டு வழக்கு

எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுதானதால் இழப்பீடு கேட்டு மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

Update: 2022-12-24 20:32 GMT


சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 15.7.2020-ல் இன்சூரன்ஸ் தொகை உள்பட ரூ.23.39 லட்சம் செலுத்தி கார் வாங்கினேன். ஓராண்டுக்கு முழுமையான வாரண்டி இருப்பதாக கூறினர். மேலும் 5 ஆண்டிற்கு 2 லட்சம் கிலோமீட்டர் வரை முறையான பராமரிப்பிற்காக ரூ.42 ஆயிரத்து 126 வசூலித்தனர். இதனால், காரை அவ்வப்போது பராமரித்து கொடுப்பது அந்த நிறுவனத்தின் பணியாகும். ஆனால் அந்த கார் என்ஜினில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் முதல் முறை சரி செய்து கொடுத்தனர். ஆனாலும் அந்த காரில் பழுது தொடர்ந்தது. 2 லட்சம் கிலோமீட்டர் வரை பராமரிக்க நிறுவனத்தினர் உறுதி அளித்திருந்தனர் அதன்படி அவர்கள் செயல்படவில்லை.

1,18,374 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே பயன்படுத்திய நிலையில் என்ஜின் பழுது தொடர்ந்தது. இதற்காக ரூ.1.10 லட்சம் பெற்றுக்கொண்டனர்.

பழுதை சரி செய்து ஊருக்கு சென்ற போதும் கார் மீண்டும் பழுதானது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சம் கிலோமீட்டர் வரை என்ஜின் பழுதை சரிபார்த்து தருவோம் என உறுதி அளித்துவிட்டு தற்போது பழுது பார்ப்பதற்கும் கூடுதலாக தொகை பெற்றுக் கொண்டதால், எனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜராகி, மனுதாரர் எம்.எல்.ஏ. ஆக இருந்தும் அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். தற்போது வரை கார் முறையாக இயங்க வில்லை, என்றார். இந்த மனுவிற்கு, சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் பொது மேலாளர் தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதம் 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்