விடுதலை படம்: திரையரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு

விடுதலை படத்திற்கு குழந்தைகளை அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் திரையரங்கு மேலாளர் அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-04-02 07:43 GMT

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றிருந்தது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த இப்படத்தை போலீசார் பாதியில் நிறுத்தி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதால் சிறுவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறி படம் பார்க்க வந்த சிறுவர்களை வெளியே செல்ல கேட்டுக்கொண்டனர்.

இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வளர்மதி என்ற பெண் தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான படத்தை காண்பிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் என்றும், இப்படம் ஆபாச காட்சிகளுக்காக 'ஏ' சான்றிதழ் வழங்கவில்லை மாறாக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலே 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் திரையரங்கில் 'ஏ' சான்று வழங்கப்பட்ட 'விடுதலை'படத்தை, தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி என்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்