காதலிக்கு கொடுத்த செல்போனை திருப்பி கேட்டதால் வீடு புகுந்து காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்

காதலிக்கு கொடுத்த செல்போனை திருப்பி கேட்டதால் வீடு புகுந்து காதலன் குடும்பத்தினரை தாக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-10 19:35 GMT

ராமநத்தம் அருகே உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் முருகன். இவர் கழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரும், மேலாதனூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியும் காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முருகன், தனது காதலிக்கு பரிசாக செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தார். இது பற்றி அறிந்த காதலியின் அண்ணன், அந்த செல்போனை உடைத்து விட்டார். இதை அறிந்த ராஜலிங்கம், மகனின் காதலியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மாணவியிடம் செல்போனை திருப்பி கேட்டு தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தரப்பினரான அஸ்வின் குமார், அறிவழகன், காமராஜ், மணிமாறன், ஆனந்தராஜ், ராகேஷ், கோவிந்தராஜ், குபேந்திரன், ஆகாஷ் ஆகியோர் முருகனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை தாக்கினர்.

இதில் முருகனின் உறவினரான கலியமூர்த்தி, கொளஞ்சி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின்குமார், அறிவழகன் உள்பட 9 பேர் மீது ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்