விருத்தாசலம் அருகே பரபரப்பு தம்பி-தங்கை முன்பு மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் 4 பேர் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே தம்பி-தங்கை முன்னிலையில் மாணவிக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-17 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள சோழன்நகரை சேர்ந்தவர் இளவரசன் மகன் சிலம்பரசன் (வயது 22). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண்ணாடம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிலம்பரசன், மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும், அதனால் உடனே எனது வீட்டுக்கு வா என அழைத்துள்ளார். இதையடுத்து மாணவியும், சிலம்பரசனுடன் அவரது வீட்டுக்கு சென்றார்.

தாலி கட்டிய வாலிபர்

அங்கு அவர் தனது பாட்டி காந்தி மற்றும் தம்பி, தங்கை ஆகியோரது முன்னிலையில் சிறுமிக்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மாணவியை அழைத்துக் கொண்டு பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அங்கு சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு மாணவியிடம், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கலைவாணி விசாரணை நடத்தினார். பின்னர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறுமிக்கு தாலி கட்டியது தொடர்பாக புகார் கொடுத்தார். அதன் பேரில் சிலம்பரசன், காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தம்பி-தங்கை முன்னிலையில் மாணவிக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்