மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாடக்கோரி வழக்கு
மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாடக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரையைச் சேர்ந்த சீனி முகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ளேன். இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரி சபையின் முதல் கல்வி மந்திரியுமாக மவுலானா அபுல்கலாம் ஆசாத் இருந்தார். கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தினார். அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தார். நம் மாணவர்களுக்காக பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அவரது பிறந்த நாளான நவம்பர் 11-ந்தேதியை கல்வி நாளாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை. எனவே மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 11-ந்தேதியன்று பள்ளிகளில் அவருடைய உருவப்படம் வைத்து விழா நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 28-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை கொண்டாட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தாக்கல் செய்த மனுதாரருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடுகிறோம் என்றனர். பின்னர் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.