கந்துவட்டி கொடுமையால் பா.ஜ.க. பிரமுகர் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் மீது வழக்கு

கந்துவட்டி கொடுமையால் பா.ஜ.க.பிரமுகர் இறந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-04 16:38 GMT

கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் திருவேங்கடம் என்கிற தினேஷ்(வயது 21). இவர் விஷம் குடித்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து தினேசின் தாய் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக பொரசக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன், அண்ணா நகரில் தனியார் நிறுவனம் நடத்திவரும் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், சத்தியசீலன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள வேல்முருகன் மற்றும் பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.

முக்கிய ஆவணங்கள் சிக்கின

இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், அண்ணா நகரில் பன்னீர்செல்வம் நடத்தி வந்த தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். தொடா்ந்து அவர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது குலுக்கல் சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் இருந்தது. இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இதேபோல் தினேசின் வீட்டிற்கும் சென்ற போலீசார், அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்