கடலூர் முதுநகர் அருகேமின்கம்பத்தில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
கடலூர் முதுநகர் அருகே மின்கம்பத்தில் மோதி நடுரோட்டில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது.
தஞ்சாவூரில் இருந்து இறால் கழிவுகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு வாகனம் ஒன்று கடலூர் வழியாக புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை தஞ்சாவூர் அடுத்த பேராவூரணியை சேர்ந்த ஆஞ்சநேயா (வயது 21) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 5.40 மணி அளவில் கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காட்டில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் வந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி நடுரோட்டிலேயே கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த இறால் கழிவுகள் அனைத்தும் சாலையில் கொட்டின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. மேலும் சரக்கு வாகன டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.