பூக்கொல்லை காட்டாற்றில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது

பூக்கொல்லை காட்டாற்றில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது

Update: 2022-11-10 20:02 GMT

பேராவூரணியில் பூக்கொல்லை காட்டாற்றில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. எனவே பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாறு பாலம்

பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை செல்லும் வழியில் பூனைகுத்தியாறு என்ற காட்டாறு உள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த காட்டாற்று பாலம் தற்போது குறுகியதாகவும், இருபுறமும் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் உடைந்து விழுந்தும் காணப்படுகிறது. மழைநேரங்களில் இந்த பாலத்தை தாண்டி தண்ணீர் செல்லும் நிலையும், அப்போது போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையும் உள்ளது. இந்த பாலம் குறுகியதாக இருப்பதால் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடும்போது, வாகன ஓட்டிகள் அடிக்கடி ஆற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.

சரக்கு ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்தது

இந்தநிலையில் நேற்று வீரியங்கோட்டை பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ எதிரே வந்த வாகனத்திற்காக வழி விடும்போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் ஓரளவு தண்ணீர் சென்றதால், வாகன ஓட்டிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதேபோல் கடந்த வாரம் பஸ்சுக்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தனது மனைவி குழந்தையுடன் ஆற்றில் தவறி விழுந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் பூக்கொல்லை காட்டாறு பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

சேதமடைந்துள்ள இந்த பாலத்தை இடித்து விட்டு, புதிதாக மேம்பாலம் கட்டித்தர வேண்டும். மேலும் இந்த பாலத்தை, தற்போதைய போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப விரிவுபடுத்தி இருபுறமும் தடுப்பு வேலி அமைத்து தர வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்