சரக்கு ஆட்டோ மின்கம்பியில் உரசி தீ பிடித்தது

ஊசூர் அருகே சரக்கு ஆட்டோ மின்கம்பியில் உரசியதில் தீ பிடித்து எரிந்தது.

Update: 2023-01-02 13:04 GMT

அடுக்கம்பாறையை அடுத்த சோழவரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது. இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தனது ஆட்டோவில், ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு ஊசூர் அருகே உள்ள தெள்ளூருக்கு சென்றார். அங்கு ஜல்லி கற்களை இறக்க ஆட்டோவின் பின்புற தொட்டியை தூக்கியுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக செல்லும் மின் கம்பியில் ஆட்டோ உரசி திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீ பரவியது. உடனே வெங்கடேசன் ஆட்டோவில் இருந்து வெளியே வந்து உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவருக்கு வயிறு, கை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வேலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் அரியூர் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்