ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்; கல்லூரி மாணவர்கள் 5 பேர் படுகாயம்

ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்பு சுவரில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-10 09:14 GMT

சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவைச் சேர்ந்தவர் கோகுல் அஸ்வின் (வயது 20). இவர், மறைமலைநகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், தனது நண்பர்களான ராயப்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்த ரஹீம் அஹமது (19), கோபாலபுரத்தை சேர்ந்த பிரசாத் (21), சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது பர்வீஸ் (19), ராயப்பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகியோருடன் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இவர்களும் கல்லூரி மாணவர்கள் ஆவர்.

ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஓடியது. நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்