மரத்தில் கார் மோதி விபத்து; தொழில் அதிபர்-மனைவி பலி

மரத்தில் கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர், மனைவியுடன் பலியானார். இவர்களுடைய மகள் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-19 18:59 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

மரத்தில் கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர், மனைவியுடன் பலியானார். இவர்களுடைய மகள் படுகாயம் அடைந்தார்.

தொழில் அதிபர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 55). இவர் கொத்தங்குளம் அருகே நூற்பு ஆலை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராமலட்சுமி (46).

இவர்கள் இருவரும், மதுரையில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மகள் சிந்துஜாவை அழைத்துக் கொண்டு, சில பொருட்களும் வாங்கிவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை தொழில் அதிபர் சந்தானகிருஷ்ணன் ஓட்டினார்.

மரத்தில் கார் மோதியது

ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஒரு புளியமரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது.

அதன் உள்ளே இருந்த சந்தானகிருஷ்ணன், ராமலட்சுமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தனர். சிந்துஜா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சிந்துஜாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடல்களை பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்