டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சுக்குநூறான கார்.. என்ஜினீயரிங் மாணவி பலி

விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2024-06-24 02:35 GMT

வேலூர்,

வேலூர் அருகே டயர் வெடித்ததால் நிலைதடுமாறி ஓடிய கார் எதிர்திசையில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விஷ்ணு (வயது 19). சென்னை ஆயிரம் விளக்கு மாடல் ஸ்கூல்தெருவை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகள் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் சென்னையை அடுத்த தண்டலம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த தமிழ்வீரன் மகன் டிராவிட் (21). சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த பாலாஜி மகள் சக்திபிரியா (21) அதே கல்லூரியில் படித்து முடித்தவர்கள். இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் நேற்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வேலூர் வழியாக ஏலகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை விஷ்ணு ஓட்டினார். காலை 9.30 மணியளவில் வேலூரை அடுத்த மோட்டூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.

அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பை (சென்டர் மீடியன்) தாண்டி மறுபுறம் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குள் பாய்ந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் விஷ்ணு, அஸ்வதி, டிராவிட், சக்திபிரியா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்