காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற வியாபாரி

மயிலாடுதுறையில், குடும்பம் நடத்த வர மறுத்ததால் திருமண நாளில் தனது காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-13 18:06 GMT

மயிலாடுதுறையில், குடும்பம் நடத்த வர மறுத்ததால் திருமண நாளில் தனது காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

மயிலாடுதுறை காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்தவர் அருள்(வயது 48). இவர், மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் புத்தகம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி(45). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்டீபன்ராஜ் (24) என்ற மகனும், மகாரித்திகா(18) என்ற மகளும் உள்ளனா்.இவர்களில் ஸ்டீபன்ராஜ் சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகாரித்திகா பெரம்பலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

திருமண நாள்

மது குடிக்கும் பழக்கம் உடைய அருளுக்கும், மனைவி ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 8 மாதங்களாக ரேவதி தனது கணவாிடம் கோபித்துக்கொண்டு விஸ்வநாதபுரத்தில் உள்ள தனது தாய் மல்லிகா வீட்டில் வசித்து வந்தார். அங்கு இருந்தபடியே அவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் அருள் தனது திருமண நாளான நேற்று முன்தினம் இரவு ஜவுளி கடைக்கு சென்று ரேவதியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கத்தியால் குத்தினார்

அப்போது உனது உடைமைகளை தருகிறேன். என்னுடன் வீட்டுக்கு வந்து அவைகைள வாங்கி செல் என்று அருள் கூறியுள்ளார். இதனையடுத்து தனது கணவருடன் ரேவதி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு சென்ற அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதுபற்றி தகவல் அறிந்த ரேவதியின் தாயார் மல்லிகா, மருமகன் வீட்டிற்கு சென்று மருமகனை திட்டி விட்டு ரேவதியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள், காமராஜர் சாலையில் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த ரேவதியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பு, வயிறு, கைகளில் குத்தினார்.

பரிதாப சாவு

அதை தடுக்க முயன்ற மல்லிகாவையும் தாக்கி விட்டு அருள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரேவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு அருளை கைது செய்தனர்.குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை திருமண நாளன்று கணவரே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்