திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது - 2 பேர் பலி

திருத்தணி அருகே திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு பஸ் புகுந்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2023-05-10 14:08 IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அண்டபட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை 31 பேர் குழுவாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திண்டிவனத்தில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி என்ற இடத்தில் பாதயாத்திரை குழுவினர் சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அரசு பஸ் அதிவேகமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த பாதயாத்திரை குழுவினர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சீதாராமன் (வயது 20), நாராயணன் (45) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் முகேஷ் கண்ணன் (14), வடிவழகன் (37) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்தில் உயிரிழந்த சீதாராமன் சென்னையில் உள்ள பிரபல கார் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான நாராயணன் கீழ் மண்ணூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்திற்கு காரணமான அரசு பஸ் டிரைவர் ராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற நபர்கள் மீது அரசு பஸ் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பஸ் டிரைவர் ராமன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திருத்தணியில் உள்ள மா.போ.சி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி போலீசார் மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்