மீன்சுருட்டி அருகே சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்

மீன்சுருட்டி அருகே சாலையில் பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-18 19:16 GMT

பஸ் கவிழ்ந்து விபத்து

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க 25-வது மாநாடு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் ேநற்று அதிகாலை 3 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தஞ்சை மாவட்டம் வரப்பூர் தேவராயன் பேட்டையை சேர்ந்த டிரைவர் அலெக்சாண்டர் (வயது 40), பஸ்சில் பயணம் செய்த பனையகோட்டை வடக்கு தெருவை சேர்ந்த சின்னையன் (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த 8 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து மாநாட்டிற்கு சென்றவர்கள் சென்னை செல்லாமல் மாற்று பஸ் மூலம் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்