விவசாயிகளுக்கு பலனில்லாத வேளாண் பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2024-02-20 07:57 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ,

வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை; தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. நெல், கரும்பு குறித்த தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் நெல் கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது. குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்