புரோக்கரை காரில் கடத்தி ரூ.3 லட்சம், 2½ பவுன் நகைகள் பறிப்பு
திருச்சியில் அதிகாலையில் புரோக்கரை காரில் கடத்திச்சென்று 2½ பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது. அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சியில் அதிகாலையில் புரோக்கரை காரில் கடத்திச்சென்று 2½ பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது. அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தங்கம் கடத்தல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், சார்ஜா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தங்கத்துக்கு வரி அதிகம் என்பதால், பலர் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை நூதன முறையில் இருந்து கடத்தி வருகிறார்கள்.
இதற்காக வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளிடம் அங்குள்ள புரோக்கர்கள் தங்கத்தை பசை வடிவிலோ அல்லது நகைகளாகவோ அல்லது வேறு பொருட்களில் மறைத்து வைத்தோ கொடுத்து அனுப்புகிறார்கள். அதை உரியவர்களிடம் ஒப்படைத்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை சன்மானமாக கிடைக்கும் என்று கூறி அனுப்புகிறார்கள்.
கடத்தி பறிப்பு
அதே நேரம், தரகர்கள் கொடுக்கும் தங்கத்தை கடத்தி வரும் பயணியின் புகைப்படத்தை திருச்சியில் உள்ள புரோக்கருக்கு அனுப்பி விடுகிறார்கள். அவர்கள் திருச்சி விமான நிலைய வளாகத்தில் காத்திருந்து, பயணிகள் வந்தவுடன், அவர்களை அடையாளம் கண்டு அவற்றை பெற்றுக்கொண்டு சன்மானத்தை வழங்குகிறார்கள்.
சில நேரங்களில் இவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகள் சுங்கத்துறையினரிடம் சிக்கிக்கொண்டால், நகையை அவர்கள் பறிமுதல் செய்வதுடன், வழக்கையும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் தங்கம் எடுத்து வரும் பயணிகளை கடத்திச்சென்று தங்கத்தை மட்டும் பறித்துக்கொண்டு, விரட்டி விடும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறுகிறது.
போலீசில் புகார்
இதுபற்றி போலீசில் புகார் செய்தால் தங்கம் கடத்தி வந்தது அம்பலமாகிவிடும் என்று பலர் எதுவும் நடக்காதது போல் சென்று விடுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட ஒருசிலர் மட்டுமே போலீசில் புகார் தெரிவிக்கிறார்கள். திருச்சியில் நடக்கும் விபரீதம் புரியாமல் பயணிகள் பலர் தங்கம் கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுபோல் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு நேற்று நள்ளிரவு விமானத்தில் வந்த பயணியிடம் தங்கத்தை வாங்கிக்கொண்டு வந்த புரோக்கர் ஒருவரை ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்று நகை, ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
புரோக்கர்
திருச்சி தென்னூர் மூலக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்தவர் தாவூத்பாட்ஷா என்பவரின் மகன் சாதிக்பாட்ஷா (வயது 30). இவர், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் தங்கத்தை வாங்கி வியாபாரிகளிடம் கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது தம்பி முகமதுசெரீப்பை (27) காரில் அழைத்துக்கொண்டு பணத்துடன் சாதிக்பாட்சா திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு, அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் மொத்தம் தலா 10 கிராம் எடை கொண்ட 2 கைச்சங்கிலிகளை வாங்கியுள்ளனர்.
நகை, பணத்துடன் காரில் கடத்தல்
பின்னர் அங்கிருந்து 1.45 மணி அளவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். தென்னூர் ஒய்.எம்.சி.ஏ. நர்சரி பள்ளி அருகே கார் வந்த போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் சாதிக்பாட்ஷாவின் காரை வழிமறித்தது. இதனால் காரில் இருந்து அண்ணன், தம்பி இருவரும் கீழே இறங்கியுள்ளனர். அப்போது, சாதிக்பாட்ஷா ஒரு பையில் 2½ பவுன் நகை, ரூ.3 லட்சம் வைத்திருந்தார்.
அதே நேரம், காரில் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கி, சாதிக்பாட்ஷாவிடம் நகை, பணத்தை கொடுக்கும்படி கூறி மிரட்டியுள்ளனர். அவர் மறுக்கவே, நகை, பணத்துடன் சாதிக்பாட்ஷாவை தாங்கள் வந்த காரில் அந்த கும்பல் கடத்திச்சென்றது. இதைப்பார்த்து முகமது செரீப் சத்தம்போடவே, அதிகாலை ரமலான் நோன்பு தொடங்க அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உதவிக்கு ஓடிவந்தனர்.
ஒருவர் சிக்கினார்
அப்போது, அந்த கும்பலில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் காரிலும், இருசக்கர வாகனத்திலும் தப்பிச்சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து சிக்கிய வாலிபரை அவர்கள் தர்ம அடி கொடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறினார்கள். போலீஸ் விசாரணையில், சிக்கியவர் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் (27) என்பதும், சாதிக்பாட்ஷாவை காரில் கடத்திச்சென்றது பட்டுக்கோட்டையை சேர்ந்த சமீர், பிரசாந்த், மதுரையை சேர்ந்த குமார் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சாதிக்பாட்ஷாவை கடத்திச்சென்ற கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். அத்துடன், அனைத்து சோதனைச்சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. இதற்கிடையே அந்த கும்பல், 2½ பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை பறித்துக்கொண்டு, சாதிக் பாட்ஷாவை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அக்கரைப்பட்டி பிரிவு சாலை அருகே இறக்கிவிட்டுவிட்டு தப்பிச்சென்றது.
வலைவீச்சு
இதைத்தொடர்ந்து போலீசார் சாதிக்பாட்ஷாவை மீட்டனர். மேலும் இதுகுறித்து சாதிக்பாட்ஷாவின் சகோதரர் முகமதுசெரீப் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். மேலும் நகை, பணத்துடன் தப்பிச்சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அதிகாலையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.