போடிப்பட்டி
மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அப்பர் அமராவதி அணை
அனைத்து தொகுதிகளிலும் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் தயாரித்து 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மடத்துக்குளம் தாலுகாவில் தீர்க்கப்பட வேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
திருமூர்த்தி, அமராவதி அணைகளை முழுமையாக தூர் வார வேண்டும். ஆண்டுதோறும் அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் பெருமளவு வீணாகி வருகிறது. இதனைத் தவிர்க்க அமராவதி அணைக்கு மேல் பகுதியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட அப்பர் அமராவதி அணைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தாலுகாவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆண்டு முழுவதும் முழு திறனோடு இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். 2 அணைகள், ஏராளமான நீர் நிலைகள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான நவீன நிலையம் அமைக்கப்பட வேண்டும். மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
அவசர சிகிச்சை
மடத்துக்குளத்தில் அரசு ஆஸ்பத்திரி இருந்தபோதிலும் விபத்துக்கால நவீன சிகிச்சை உள்ளிட்டவை இல்லாமலும் போதிய மருத்துவர் செவிலியர் இல்லாத நிலையிலும் உள்ளது. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை மருத்துவமனையாக இதனை தரம் உயர்த்த வேண்டும். மடத்துக்குளம் தொகுதியில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளது. கூட்டாற்றில் பாலம் கட்ட வேண்டும்.சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.உடனடி மருத்துவ வசதி கிடைக்க வகை செய்ய வேண்டும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது இங்குள்ள மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
விவசாயம் முக்கிய தொழிலாகக் கொண்ட மடத்துக்குளம் தொகுதியில் விளைபொருட்களை இருப்பு வைக்க நவீன வசதிகளுடன் கூடிய குளிர்பதனக் கிடங்கு வேண்டும்.காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். .குமரலிங்கம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.இங்குள்ள பழமையான கோவில்களை புதுப்பித்து சுற்றுலா தலமாக மேம்பாடு செய்ய வேண்டும். பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-----