கிளை சிறைச்சாலை அமைக்க வேண்டும்

வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-26 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்...

வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தாசில்தார் அலுவலகத்துடன் அருகருகே போலீஸ் நிலையம், கிளைக்கருவூலம், கிளை சிறைச்சாலை அமைந்து இருந்தது. நாளடைவில் இங்குள்ள கிளை சிறைச்சாலை முற்றிலும் அகற்றப்பட்டு, நாகப்பட்டினம் சிறைச்சாலையுடன் இணைத்து விட்டனர். அதன் பிறகு இன்று வரை வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமையவில்லை.

வேதாரண்யத்தில் கோர்ட்டு அமைந்துள்ளது. இந்த கோர்ட்டில் சரணடையும் குற்றவாளிகள் அல்லது தண்டனை பெற்ற குற்றவாளிகளை கிளைச்சிறையில் அடைப்பதற்கு நாகப்பட்டினம் தான் கொண்டு செல்ல வேண்டும். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கிளை சிறைச்சாலை

தண்டனை பெற்ற கைதிகளை கொண்டு செல்வதும், அவர்களை திரும்ப கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வருவதும் போலீசாருக்கு மிகுந்த அலைச்சலை ஏற்படுகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மயிலாடுதுறை, பொறையாறு, சீர்காழி ஆகிய 3 இடங்களிலும் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது.

ஆனால் நாகை மாவட்டத்தில் நாகையில் மட்டும் ஒரே ஒரு சிறைச்சாலை உள்ளது. சிலசமயங்களில் மாவட்ட சிறைச்சாலையில் இடம் இல்லாவிட்டால் தண்டனை பெற்ற கைதிகளை மயிலாடுதுறை, சீர்காழி போன்ற கிளை சிறைச்சாலைக்கு தான் அனுப்ப வேண்டியுள்ளது.

பாதுகாப்பு இல்லை

மேலும் அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அங்கிருந்து வேதாரண்யத்திற்கு அழைத்து வர வேண்டியுள்ளது.

சிலசமயம் அரசு பஸ் அல்லது தனியார் வாகனங்களில் தான் கைதிகளை அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதில் பாதுகாப்பு இல்லை.

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் கைதியோ அல்லது கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரும் கைதியோ தப்பிவிட்டால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீசாரை பணி இடை நீக்கம் செய்து விடுகிறார்கள். எனவே அரசு தனி கவனம் எடுத்து வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமைத்து தரவேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்