சரக்கு வாகனத்தில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சாவு
சரக்கு வாகனத்தில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
கொக்கி குத்தியது
திருவெறும்பூரை அடுத்த குண்டூர் ஊராட்சி பர்மா காலனியை சேர்ந்தவர் சிக்கந்தர்(வயது 40). கொத்தனார். இவரது மகன் பைசில்கான்(5). நேற்று முன்தினம் இரவு பைசில்கான், அப்பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் வாகனத்தில் இருந்த கொக்கி, அவனது தலையில் குத்தியுள்ளதில் பலத்த காயமடைந்த பைசில்கானை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சாவு
பின்னர் திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பைசில்கான், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீசார் பைசில்கானின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.