சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
எருமப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
எருமப்பட்டி
கூலித்தொழிலாளி
எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரபட்டி பஜனை மடம் தெருவை சேர்ந்தவர் முத்தரசு. இவருடைய மகன் தனபால் (வயது 23). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் வீட்டின் அருகில் குடியிருக்கும் சிவா மனைவி கார்த்திகா (24) என்பவரது 6 மாத குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக வரதராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் முட்டாஞ்செட்டி ரோட்டில் சென்றபோது எதிரே பால் ஏற்றி வந்த சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த சரக்கு வாகனம் தனபால் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
சிகிச்சை பலனின்றி இறந்தார்
இதில் குழந்தை உள்பட 3 பேரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இந்தநிலையில் தனபால் தலையில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் உயிரிழந்தார். இது குறித்து எருமைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரக்கு வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.