எருது விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் பலி போலீஸ் தடியடியில் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்
நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்தார். அவர், போலீசார் தடியடி நடத்தியதில் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எருதுவிடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 123-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. தேவரா கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே எருது விடும் திருவிழா நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 3 மணி வரை எருது விடும் திருவிழா நடைபெற்றது.
போலீஸ் தடியடி
விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் விழா நடத்தப்பட்டதால் போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷாரப் (வயது 19) என்ற வாலிபரை மாடு முட்டியதில் காயத்துடன் கீழே விழுந்தார். இதனை அறியாமல் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.
வாலிபர் பலி
இதனால் அதிக ரத்தம் வெளியேறி மயக்கம் அடைந்த முஷாரப்பை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சக நண்பர்களே இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முற்றுகை
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முஷாரப் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக செயற்குழு உறுப்பினர் சானவுல்லா தலைமையில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் தாக்கியதில் முஷாரப் இறந்ததாக கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முஷாரப்பை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் திருப்பத்தூர் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.