போலந்து நாட்டு பெண்ணை கரம் பிடித்த புதுக்கோட்டை வாலிபர்

கடல் கடந்து வந்த காதலால் போலந்து நாட்டு பெண்ணை புதுக்கோட்டை வாலிபர் கரம்பிடித்தார்.

Update: 2023-07-09 17:30 GMT

போலந்து நாட்டு பெண்

புதுக்கோட்டை மாவட்டம், பூசுத்துரையை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்-புவனேஸ்வரி. இவர்களது மகன் அருண்பிரசாத் (வயது 32). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் போலந்து நாட்டுக்கு சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அந்த வேலையை உதறிவிட்டு, அங்கு தனியாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அருண் பிரசாத்திற்கு, போலந்து நாட்டை சேர்ந்த அனியா என்கிற அன்னா ரில்ஸ்கா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரையும் அணுகி உள்ளனர். பின்னர் இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் போலந்து நாட்டில் முறைப்படி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்களது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டு பத்திரிகை அடிக்கப்பட்டு உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது.

திருமணம்

இதையடுத்து அன்னவாசல் அருகே அடப்பங்காராசத்திரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் கலாசார முறையில் அருண் பிரசாத்-அனியா திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இனம், மொழி, மதம் என கடல் கடந்து வந்த காதலை பெற்றோர்கள் ஆதரித்த நிலையில் போலந்து நாட்டு பெண்ணை புதுக்கோட்டை இளைஞர் கரம் பிடித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் கலாசாரம்

இதுகுறித்து மணமகன் அருண் பிரசாத் கூறுகையில், போலந்தில் பணி செய்யும் பொழுது அனியாவுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழ் கலாசார முறையில் திருமணம் நடைபெற்று உள்ளது. எனது மனைவி அனியாவுக்கு தமிழ் கலாசாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக சொல்லிக் கொடுப்பேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்