திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Update: 2022-12-06 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கார்த்திகை தீபதிருநாள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதருக்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. பின்னர் மகா மண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது.

சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணியளவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி, சூரிய காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வழிபட்டனர்.

அதேபோல் கோவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்திய போது திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்