80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறியப்பட்ட பறவையினம்
80 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பறவையினம் கண்டறியப்பட்டது.;
உப்பிலியபுரம்:
சேலம் மாவட்டத்தில் இந்திய கல்கவுதாரி (பெயின்டட் சாண்டுகிரவுஸ்) என்ற அரிய வகைப் பறவை இருப்பது பறவைகள் கண்காணிப்புப் பணியின்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சேலம் பறவையியல் கழக இயக்குனர் கணேஷ்வர் கூறியதாவது:-
நானும், சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் ராகவ், வெங்கட்ராமன் ஆகியோர் மேட்டூர் தாலுகாவில் உள்ள நீதிபுரம் ஏரியில் பறவைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். அப்போது இதுவரை பார்த்திராத சந்தன நிறமுடைய நான்கு பறவைகளைக் கண்டோம். பைனாகுலர் வழியாக பார்த்தபோது, அவை மிக அரிதாகவே தென்படக்கூடிய இந்தியக் கல்கவுதாரிகள் என்பதை உறுதி செய்து படங்களை எடுத்தோம்.
தமிழ்நாட்டில் 2 வகையான கல்கவுதாரிகள் காணப்படுகின்றன. அதில் செவ்வயிற்று கல்கவுதாரி ஓரளவிற்கு பரவலாகத் தென்படுகிறது. ஆனால் தற்போது சேலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தியக் கல்கவுதாரி மிகவும் அரிதான பறவையாகும். வறண்ட திறந்தவெளி நிலங்கள், கற்கள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் புதர்க்காடுகளில் கல்கவுதாரிகள் வசிக்கும். எனவே கால்நடை மேய்ப்பவர்களும், உள்ளூர் மக்களும் இந்தப் பறவையைப் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவை எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை. கடைசியாக 1942-ம் ஆண்டு ஆப்ரே பக்ஸ்ட்டன் என்பவர் சேலத்தில் இந்திய கல்கவுதாரிகளைப் பார்த்ததாக தனது குறிப்புகளில் எழுதியுள்ளார். அதன் பிறகு 80 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சேலத்தில் புகைப்படத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைத் தவிர இப்பறவை தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தென்படுகிறது. இவ்வகை பறவைகள் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலை பகுதிகளில் தென்படுகிறதா? என்பதை அறிந்து கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.