ஓமந்தூரார் தோட்டத்தில் ஓர் உயிரோவியம்: கருணாநிதி சிலை திறப்புக்கு எஸ்.ஜெகத்ரட்சகன் கவிதை வடிவில் புகழாரம்

ஓமந்தூரார் தோட்டத்தில் ஓர் உயிரோவியம். சிலையாய் அல்ல செந்தமிழ்நாட்டின் திசையாய் அன்றோ தெரிகிறது என்று கருணாநிதி சிலை திறப்பு குறித்து எஸ்.ஜெகத்ரட்சகன் புகழாரம் செலுத்தி உள்ளார்.

Update: 2022-05-29 07:12 GMT


கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான எஸ்.ஜெகத்ரட்சகன் கவிதை வடிவில் புகழாரம் செலுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஓமந்தூரார் தோட்டத்தில் உயிர் ஓவியம் ஒன்று நிற்கிறது. அதை தேமதூரத் தமிழ்த்திரட்டாய் எட்டு திசையும் நிமிர்ந்து பார்க்கிறது. வானவில் உடைத்து வார்த்தை படைத்த வாலறிவொன்று மிதக்கிறது. தமிழ் ஞானக்குளியல் நடத்திய விடியல் ஞாயிறு பூத்து சிரிக்கிறது.

பெரியார், அண்ணா பேராக்கத்தின் பேருரு விண்ணை தொடுகிறது. அது எரியும் திராவிட இனமானத்தின் எழுச்சி ஒளியாய் மிளிர்கிறது. மொழியுணர்வு தீ மூட்டிய வெற்றி முகத்தில் வீரம் பொலிகிறது. நம் விழி நரம் பெங்கும் விதைகள் தூவிய வெளிச்சம் பொங்கி வழிகிறது.

சிலையாய் அல்ல செந்தமிழ்நாட்டின் திசையாய் அன்றோ தெரிகிறது. அது நிலையாய் நிற்கும் மலையாய் அன்றோ நெஞ்சில் கோலம் வரைகிறது. காலச்சிதலும் கரைக்க முடியாக் காவியம் கண்ணை கவர்கிறது. அது நீலத்திரை கடல்நிற்கும் வள்ளுவர் நிழலாய் கண்ணில் நிறைகிறது.

உயிர் ஓவியம்

தமிழ்நாட்டுக்கேதனி வடிவத்தை தந்தவர் அழகு தவழ்கிறது. அதில் தமிழர் போற்றும் தங்கத் தளபதி தவத்தின் சால்பு கமழ்கிறது. ஓடிக்கொண்டே இருந்த குதிரை உலவும் காற்றில் உறைகிறது. அது தேடி கொடுத்த செல்வப் புகழில் தென்னகம் இன்றைக் கொளிர்கிறது.

வீண்மரங்களை வீணையாக்கிய வித்தகம் உயிரில் அசைகிறது. தினம் தேன்பிலிற்றிய திருவாய் கண்டால் தேகத்தை அது பிசைகிறது. ஏட்டில், நாட்டில் எழுதிய புரட்சி இலக்கியம் இங்கே திகழ்கிறது. அதை பாட்டில் வடித்து படிக்கும் போதே படைக்கள உணர்ச்சி தெறிக்கிறது. தந்தைக்கொன்று தனயன் செய்யும் தகைசால் பெருமை வளர்கிறது. நம் முந்தையர்க் கில்லாமூவாப் புகழின் முத்திரை அதிலே பதிகிறது.

செப்பம் உடைய செந்தமிழ் வாணர் சிலையில் தமிழே வளர்கிறது எனும் ஒப்பில்லாத உணர்ச்சி மழையில் உள்ளம் நனைந்து மகிழ்கிறது. சுயமரியாதை சூரியன் ஒன்று தோட்டத்துக்குள் மலர்கிறது. அதை சுயமிழக்காத தமிழர் கூட்டம் சூடிக்களித்து சுடர்கிறது. ஓமந்தூரார் தோட்டத்தில் உயிர் ஓவியம் ஒன்று நிற்கிறது. அதை தேமதூரத் தமிழ் திரட்டாய் எட்டு திசையும் நிமிர்ந்து பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்