வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது

வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் புதிய சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது. இந்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள் வெளிநடப்பில் ஈடுபட்டன.

Update: 2023-04-21 23:57 GMT

சென்னை,

தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும். அதற்கு உரிய சம்பளம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் மசோதாவை எதிர்த்தன. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் நாகை மாலி, வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே 'ஓடி' என்ற முறை இருக்கையில் இந்த சட்டத்திருத்த மசோதா தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். மேலும் அவர், 8 மணி நேர வேலை என்பதை இந்த சட்ட மசோதா நீர்த்துப்போகச் செய்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க. உறுப்பினர் சதன் திருமலைக்குமார், இந்த சட்ட மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், தேர்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

யாருக்கும் பாதிப்பு இல்லை

தி.மு.க. கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு பதில் அளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது:-

இந்த சட்டத்திருத்த மசோதாவால் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. 8 மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் ஊதியம் என்ற ஷரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. தொழிற்சாலை நெகிழ்வுத்தன்மைக்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும்.

ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்ந்து இருக்கும். தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் செயல்படும். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும். தொழிலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில்தான் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். எனவே இந்த சட்டத்திருத்தத்தால் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விருப்பத்தின் அடிப்படையில்...

அமைச்சர் சி.வி.கணேசன் பேசி முடித்தபிறகும் தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டன. அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேச எழுந்தார். அவர் பேசமுடியாத அளவுக்கு அவர்கள் கூச்சலிட்டனர்.

அதனால் கோபமடைந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உங்களுக்கு உங்கள் கருத்துகளை சொல்வதற்கு உரிமை வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் எனக்கும் பேச உரிமை இருக்கிறது. நான் பேசுவதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார்.

அதையடுத்து உறுப்பினர்கள் அமைதியானார்கள். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 'பல தொழிற்சாலைகள் வர இருக்கின்றன. இந்த திட்டத்தால் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. யார் 12 மணி நேரம் வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான், மற்ற தொழிற்சாலைகளுக்கு இல்லை. இது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். வேலைநேரம் கட்டாயம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் குடிநீர் வசதி, குளிர்சாதன வசதி குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றார்.

நம்புங்கள்

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், வாரத்தில் மொத்தம் 48 மணி நேரம், 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை அனைத்து நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்றார்.

அமைச்சர்கள் தொடர் விளக்கத்துக்குப் பிறகும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், 'இந்தப் பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுக வேண்டும். இதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது என்று அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்தால் முதலில் குரல் கொடுப்பவர் நம்முடைய முதல்-அமைச்சர்தான். எனவே நம்புங்கள். தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்' என்றார். அதைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

வெளிநடப்பு

இதற்கிடையே இந்த சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Tags:    

மேலும் செய்திகள்