கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இங்கு அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு கரடி அந்த சாலையில் உலா வந்தது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கருஞ்சிறுத்தைகள், சிறுத்தைகள், காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.