பேரூராட்சி ஊழியர் வீட்டில் புகுந்தது கரடியா?

நாட்டறம்பள்ளி அருகே பேரூராட்சி ஊழியர்வீட்டில் புகுந்தது கரடியா? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-10-01 19:18 GMT

கரடி புகுந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்த போது கரடி ஓடியதை அவர் பார்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் வீட்டின் நான்கு அடி உயரமுள்ள சுற்று சுவர் மீது ஏறி, கேட் வழியாக குதித்து சென்றதாகவும், வீட்டு வராண்டாவில் சென்சார் பொருத்தப்பட்ட புல்லட் நிறுத்தியிருந்ததாகவும், அதில் கரடி உரசியதால் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்ததாகவும் கூறினார்.

வனத்துறையினர் ஆய்வு

மேலும் இது குறித்து அவர் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வாணியம்பாடி வனச்சரகர் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிந்திருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதா என வனவர் வெங்கடேசன் தலைமையில் பரமகுரு, மணி, அரவிந்த், நாகராஜ் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

வாய்ப்பு இல்லை

இது குறித்து வாணியம்பாடி வனச்சரகர் குமார் கூறுகையில் பேரூராட்சி ஊழியர் முருகன் வீட்டின் கேட் மீது கரடி ஏறி குதித்து சென்றதாக தகவல் தெரிவித்தார். ஆனால் கரடி குதித்த இடங்களை ஆய்வு செய்து கால் பதிந்்த தடயங்களை படம் பிடித்து அதனை ஆய்வு செய்து வருகின்றோம். வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கரடி வந்து சென்றதற்கான தடயம் எதுவும் இல்லை.

இதனால் கரடி ஊருக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் வீட்டின் கேட் மீது ஏறி குதித்தது செந்நாயாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இருப்பினும் அப்பகுதியில் 5 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் ஊர் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்