விறகு சேகரிக்கசென்ற முதியவரை கடித்து குதறிய கரடி
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை கரடி கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை கரடி கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடி கடித்து குதறியது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 70). கூலி வேலை செய்து வருகிறார். திருப்பதி தனது மகன் வெங்கடேசனுடன் சின்ன பொன்னேரி அருகே ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள புன்னன் வட்டம் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அங்கு வெங்கடேசன் சற்று தொலைவில் விறகு சேகரித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வெளியில் வந்த கரடி ஒன்று திருப்பதியை கடித்து குதறியது. அவருடைய கழுத்து, கை, கால், மார்பு ஆகிய பகுதிகளில் கடித்து குதறியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் கூச்சலிட்டார். இவரது சத்தத்தை கேட்டு தொலைவில் இருந்த அவரது மகன் வெங்கடேசன் மற்றும் பழனி மற்றும் அந்தப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
உடனடியாக ரத்த காயங்களுடன் இருந்த திருப்பதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதியவரை கரடி கடித்து குதறிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.