படப்பை அருகே முன்விரோதத்தில் சரமாரி அரிவாள் வெட்டு; 2 பேர் பலி - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
படப்பை அருகே முன்விரோதத்தில் மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.;
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (வயது 23), சுரேந்தர் (20) ஆவர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் அருகே உள்ள சிவன் கோவில் பகுதியில் இருந்தபோது, மோட்டார் சைக்கிள் அந்த வழியாக வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையிலான போலீசார், வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ், சுரேந்தர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்ததில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தால் மணிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.