வடமாநில தொழிலாளிக்கு சரமாரி அடி-உதை

போடி அருகே மாணவர்களின் கடத்தல் நாடகத்தால், வடமாநில தொழிலாளியை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-08 18:45 GMT

பள்ளி மாணவர்கள் கடத்தல்

போடி அருகே சில்லமரத்துபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் நேற்று காலையில் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து பள்ளியில் இருந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த மாணவர்களை தேடினர்.

அப்போது சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள சிலமலை கிராமத்தில் ஒரு மரத்தடியில் 3 மாணவர்களும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பெற்றோர் விசாரித்தபோது, அங்கு உட்கார்ந்து இருந்த கம்பளி போர்வை விற்பனை செய்யும் வடமாநில வாலிபர் ஒருவரை காண்பித்து, அவர் தங்களை கடத்தி செல்ல முயன்றதாக கூறினர். இதை கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அந்த வடமாநில வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். அந்த வடமாநில வாலிபரையும், பள்ளி மாணவர்கள் 3 பேரையும் போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார், பள்ளி மாணவர்கள் 3 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தங்களை ஒரு கருப்பு நிற ஆட்டோவில் வாலிபர் ஒருவர் கடத்தி சென்றதாக மாணவர்கள் கூறினர். இதையடுத்து பள்ளிக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் மாணவர்கள் கூறிய நேரத்தில், அப்படி ஒரு ஆட்டோ சென்றதாக கேமராவில் காட்சி பதிவாகவில்லை.

நாடகமாடியது அம்பலம்

இதைத்தொடர்ந்து பிடிபட்ட வடமாநில வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த 25 வயது வாலிபர் என்றும், தேனி முத்துதேவன்பட்டியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி, கம்பளி போர்வை விற்பனை செய்து வருவதாகவும், மாணவர்களை கடத்தவில்லை என்றும் கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், பள்ளி மாணவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை, ஒரு மாணவனின் பெற்றோர் பார்த்துள்ளார். இதனால் அவர்கள் பயந்து தங்களை வடமாநில வாலிபர் கடத்தியதாக கூறி நாடகமாடியது அம்பலமானது. பின்னர் மாணவர்களிடம், இதுபோன்ற தவறான தகவல் கூறக்கூடாது என்றும், பள்ளிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர். பொதுமக்கள் தாக்குதலில் காயமடைந்த வடமாநில வாலிபரை சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

இந்த சம்பவம், வாட்ஸ்-அப் மூலம் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்