ரூ.9¼ கோடியில் நந்தியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பணை-பாசன வாய்க்கால்
ரூ.9¼ கோடியில் நந்தியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பணை-பாசன வாய்க்கால் திறக்கப்பட்டது.;
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றில் வீணாக மழைநீர் கலப்பதை தடுக்கும் வகையில் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தலின்படி, கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நந்தியாற்றில் தடுப்பணை அமைப்பது அமைச்சர் கே.என்.நேருவின் நீண்ட நாளைய கனவு திட்டமாகும். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி காணக்கிளியநல்லூர் நந்தியாற்றில் சுமார் ரூ.9.24 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை மற்றும் வழங்கு வாய்க்கால்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நேற்று நந்தியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பணை மற்றும் பாசன வாய்க்கால் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., திருச்சி மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தடுப்பணை மற்றும் பாசன வாய்க்கால்களை பூத்தூவி மதகுகளை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், இந்த தடுப்பணை சுமார் 75 மீட்டர் நீளமும், 150 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்த தடுப்பணையின் மூலம் 178 மி கன அடி நீரை தேக்கி வைக்கப்படும். தடுப்பணையின் இடது புறம் வழங்கு வாய்க்கால் மூலம் 3 பெரிய ஏரிகள் நீரேற்றம் செய்யப்படும். மேலும் சுமார் 1 கி.மீ. சுற்றளவில் உள்ள 37 கிணறுகள் மற்றும் 36-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதன்மூலம் 261.87 எக்டேர் விளை நிலங்கள் பாசனவசதி பெறும். மேலும் தடுப்பணையில் வெள்ளநீர் போக்கி அமைத்து அதன்மூலம் பெரியநல்லேரி, சிறியநல்லேரிக்கு தண்ணீர் சென்றடைவதால், கூடுதல் விளைநிலங்கள் பாசனவசதி பெறுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், என்றார். நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், தாசில்தார் விக்னேஷ், புள்ளம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் செல்வராசா, மாவட்ட கவுன்சிலர் ஜெயலெட்சுமிகருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்கராயர், ராஜமாணிக்கம், ஸ்ரீதர், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் நித்தியானந்தன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.