மீண்டும் மதுக்கடை அமைக்க வேண்டும்

மஞ்சூர் பஜாரில் மீண்டும் மதுக்கடை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2022-07-11 13:08 GMT

ஊட்டி

மஞ்சூர் பஜாரில் மீண்டும் மதுக்கடை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அந்த வகையில் கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதன் மூலம் கோத்தகிரி பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி தருகிறோம். தற்போது மார்க்கெட்டின் ஒரு பகுதி கடைகளை அகற்றிவிட்டு உழவர் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் 60 கடைகளை அகற்றி உழவர் சந்தை அமைப்பதாக தெரிகிறது.

இதனால் அந்த 60 வியாபாரிகளின் குடும்பங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே கோத்தகிரியில் உழவர் சந்தை இருந்த இடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் அந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதால், பெண்கள் செல்ல இடையூறாக இருக்கும் எனக்கருதி உழவர் சந்தை மூடப்பட்டு உள்ளது.

மதுக்கடை வேண்டும்

புதிதாக உழவர் சந்தை கட்டினால், மீண்டும் அரசு பணம் விரயமாகும். எனவே ஏற்கனவே உள்ள உழவர் சந்தையை புதுப்பித்து செயல்படுத்த வேண்டும். மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மஞ்சூர் பகுதி வியாபாரிகள் மற்றும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மஞ்சூர் பஜார் பகுதியில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. மஞ்சூர்-ஊட்டி சாலையில் உள்ள இந்த கடையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால், அங்கிருந்த மதுக்கடை மூடப்பட்டது.

இதனால் மதுப்பிரியர்கள் பிக்கட்டி மற்றும் எடக்காடு போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. மேலும், மஞ்சூரில் மதுக்கடையை மூடியதால் பஜாரில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மஞ்சூர் பஜார் பகுதியில் வேறு இடத்தில் மதுக்கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி

உதகை சுற்றுலா கார், சுமோ, மேக்சி, கேப் ஓட்டனநர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், வெளி மாவட்டங்களில் வாங்கப்பட்டு, ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளூர் சுற்றுலா வாகனங்களை கல்லட்டி மலைப்பாதையில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் மொத்தம் 106 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை அதிகாரி ஜெயராமன், துணை தாசில்தார் பூபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்