ஆயுள் காப்பீட்டு தொகையை தர மறுக்கும் வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

ஆயுள் காப்பீட்டுதொகையை தர மறுக்கும் வங்கி ரூ.1 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-02 18:45 GMT

ஆயுள் காப்பீட்டு ெதாகையை வழங்க மறுக்கும் வங்கி ரூ.1 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தனி நபர் கடன்

திருவாரூர் அருகே உள்ள கூட்டுறவு நகர் சித்திரை வீதியை சேர்ந்தவர் ராஜா. வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வந்த இவர், விளமலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் வங்கி கிளையில் கடந்த 2017-ம் ஆண்டு கடன் பெற்று அதனை முறையாக திருப்பி செலுத்தி உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதே கிளையில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் தனி நபர் கடனாக பெற்றுள்ளார். இதற்காக மாதந்தோறும் ரூ.9,519 சுலப மாத தவணையாக தனது வங்கி கணகில் பிடித்தம் செய்யும் முறைப்படி திருப்பி செலுத்தி வந்தார்.

உடல்நலக்குறைவால் இறப்பு

இந்த கடன் பெறும்போது ஆயுள் காப்பீடு செய்ய வங்கி கிளை அறிவுறுத்தியதன் அடிப்படையில் அதே வங்கியில் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பிரீமிய தொகை ரூ.2,240 செலுத்தி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாலிசி எடுத்துளளார்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி ராஜா உடல்நலக்குறைவால் இறந்தார். .இதனையடுத்து இந்த விவரத்தினை மும்பையில் உள்ள வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுக்கு தெரியப்படுத்தும் வகையில் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழை வைத்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி விண்ணப்பித்து இறந்த தனது கணவருக்கு காப்பீடு நிறுவனத்தில் இருந்து கிடைக்கக்கூடிய தொகையை வைத்து கணக்கினை நேர் செய்து கொள்ள ராஜாவின் மனைவி கற்பகச்செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு

அதற்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி பதில் அனுப்பிய இன்சூரன்ஸ் நிறுவனம், உரிய மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று பதில் அனுப்பி உள்ளனர்.

இதனையடுத்து மன உளைச்சலுக்கு உள்ளான கற்பகச்செல்வி, இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.

ரூ.1 லட்சம் இழப்பீடு

இந்த தீர்ப்பில் தனி நபர் கடன் பெற்ற தொகையில் வங்கி கிளை அவரது வங்கிக் கணக்கில் இருந்து காப்பீட்டிற்கு என குறிப்பிட்டு ரூ.5 ஆயிரத்து 482 பிடித்தம் செய்துள்ளது. இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கியும் புகார்தாரரின் கணவர் மருத்துவ குறிப்புகளை கேட்பது சட்டப்படி ஏற்புடையதில்லை.

அவர் உயிரிழந்த நிலையில் அவர் செலுத்த வேண்டிய கடன் தொகையினை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளாமல் இருந்தது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் ராஜா பெற்றிருந்த தனி நபர் கடனுக்கான பாக்கி தொகையை வங்கி தரப்பு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு ராஜா பெற்ற கடன் கணக்கை முடித்து அதற்கான சான்றிதழை புகார்தாரரிடம் 6 வார காலத்திற்குள் எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ, தனித்தோ வழங்க வேண்டும்.

புகார்தாரக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ, தனித்தோ வழங்க வேண்டும்.

9 சதவீத ஆண்டு வட்டி

மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து 6 வார காலத்திற்குள் புகார்தாரருக்கு தொகையை வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு உத்தரவு பிறப்பித்த தேதியில் இருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்