மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
மீனவர்கள் சார்பில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் பொதுச்செயலாளர் தாஜுதீன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கஜா புயலால் இங்கு உள்ள படகுகள் முழுவதும் முழுமையாக சேதம் அடைந்துவிட்டது. தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும், இதுநாள் வரை அமைக்கவில்லை. எனவே இங்கு தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். மீனவர்களை கடல் சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
மீனவர் கூட்டுறவு வங்கி
தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் மீனவர் கூட்டுறவு வங்கி ஏற்படுத்தித்தரவேண்டும். வரி இல்லாமல் உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும்.
மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வரும்போது ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மீன்கள் கெட்டுவிடுகிறது. இதற்கு அரசு பெரிய படகுகளுக்கு பனிக்கட்டி தயாரிக்கும் எந்திரத்தை படகிலேயே பொருத்தி பயன்பெறவும், சிறியபடகுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரமிக்க ஐஸ் பாக்ஸ்களும் முழு மானியத்துடன் வழங்க வேண்டும்.
ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்தடைகாலம் என்பதை மழை, புயல் போன்ற காலங்களுக்கு ஏற்ப அக்டோபர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 14-ந்தேதி வரை என மாற்றி அமைத்தால் உயிர் உடமைகளை பாதுகாக்கவும், மற்ற எல்லாவித மீனவர் நலனுக்கும் ஏற்றதாகும். இதனை அரசு செய்து தர வேண்டும்.
நவீன வசதியுடன் உயர் சிகிச்சை ஆஸ்பத்திரி
மல்லிப்பட்டினம் துறைமுகப்பகுதியில் ஒரு நவீன வசதியுடன் உயர் சிகிச்சை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும். ஆற்று முகதுவாரத்தில் உள்ள மணல்திட்டுகளை அப்புறப்படுத்தி தரவேண்டும. 3 முதல் 5 நாட்கள் வரை தங்குகடல் மீன் பிடிக்கும் அனுமதியை வழங்க வேண்டும். மீன்களை வாங்கி கருவாடு தயாரிக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் மழைக்காலங்களில் நஷ்டத்திற்கு ஆளாகி வருவதால் அவர்களுக்கு நவீன வசதியுடன் மீன் உலர்த்தும் தளம் பெரிய அளவில் அமைத்து தர வேண்டும். வருகிற ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்க இருப்பதால் கடல் வளம் பெருக கடலில் இறால் மற்றும் மீன் குஞ்சுகளை இருப்பு செய்து தந்து உதவினால் கண்டிப்பாக மீன் வளம் பெறுவதுடன் மீனவர்களுக்கு நல்ல லாப மீட்ட வழிவகை செய்யலாம். இதனை அரசு பரிசீலித்து உடனடியாக மீன் குஞ்சுகளை இப்போது இருப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.