மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதலில் 9 மாத பெண் குழந்தை பலி
அணை்கட்டு அருகே மோட்டார்சைக்கிளும் ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 9 மாத பெண் குழந்தை பலியானது. மேலம் குழந்தையின் பெற்றோரும், சிறுமியும் காயம் அடைந்தனர்.
தடுப்பூசி போடுவதற்காக...
ஒடுகத்தூரை அடுத்த கெங்கசானி குப்பம் கொல்லை மேடு பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் வெங்கடேசன் (வயது 27). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 9 மாதத்தில் டர்ஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் டர்ஷிதாவுக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இதனையொட்டி இருவரும் குழந்தையை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டினார். குழந்தையை மனைவி பத்மாவதி பின்சீட்டில் அமர்ந்து மடியில் அமர்த்திக்கொண்டு வந்தார். வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது பத்மாவதியின் அக்காள் மகள் மோனிதா ஸ்ரீ (4) அமர்ந்திருந்தாள்.
நாராயணபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே ரமேஷ் என்பவர் மனைவி விஜயா (41) ஸ்கூட்டரும் இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில்மோட்டார் சைக்கிள் பயணம் செய்த வெங்கடேசன், மனைவி வளர்மதி, 9 மாத பெண் குழந்தை டர்ஷிதா, மற்றும் நான்கு வயது சிறுமி மோனிதா ஆகிேயார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
சிகிச்சை
அந்த பகுதியில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த ஒன்பது மாத குழந்தை டர்ஷிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மோனிதா மற்றும் வெங்கடேசன் பத்மா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வெங்கடேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயாவிடம் (41) விசாரணை செய்து வருகின்றனர்.