78 வயது மூதாட்டி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா

திருச்சியில் 78 வயது மூதாட்டி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2022-12-19 19:34 GMT

திருச்சியில் 78 வயது மூதாட்டி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

ஓய்வுபெற்ற தாசில்தார்

திருச்சி பொன்னகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வுபெற்ற தாசில்தார். இவருடைய மனைவி சரோஜா (வயது 78). இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எனது வீட்டை 2015-ம் ஆண்டு மூத்தமகன் செந்தில்குமாருக்கு தானசெட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். அவர் தனது 2-வது மனைவி ஸ்ரீதேவிக்கு அந்த வீட்டை எழுதி கொடுத்துவிட்டார். இருப்பினும் நான், எனது மகன் செந்தில்குமார், அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் சியாம்பாலாஜி, மருமகள் ஸ்ரீதேவி ஆகியோர் அதேவீட்டில் வசித்து வந்தோம். இந்தநிலையில் கடந்த மாதம் சியாம்பாலாஜி விபத்தில் இறந்தார்.

இதனால் துக்கம் தாங்காமல் சில நாட்களில் எனது மகன் செந்தில்குமாரும் இறந்தார். கடந்த 7-ந் தேதி அவர்களுடைய கர்மகாரியம் முடிந்தவுடன் மருமகள் ஸ்ரீதேவி எனது துணிகளை வெளியே வீசிவிட்டு வீட்டின் கீழ் பகுதியை பூட்டிவிட்டார். இதனால் நான் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்.. இதை விசாரித்த கோர்ட்டு என்னை அதேவீட்டில் குடியிருக்கவும், கண்டோன்மெண்ட் போலீசார் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது. இதனால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

தர்ணா

இந்தநிலையில் சரோஜாவை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி அந்த வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்