மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பலி
நெல்லையில் குடிநீர் தொட்டியில் கை கழுவ சென்றபோது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
நெல்லையில் குடிநீர் தொட்டியில் கை கழுவ சென்றபோது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பந்தல் தொழிலாளி
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு அம்பேத்கர் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். பந்தல் போடும் தொழிலாளியான இவர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.
இவருடைய மனைவி சோனியா. இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பேச்சியம்மாள் என்ற சத்தியா (வயது 7) என்ற மகளும், 2 மகன்களும் உண்டு. அங்குள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சத்தியா 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கை கழுவ சென்ற சிறுமி
நேற்று சக்திவேலின் வீட்டின் முன்பாக ஓலையாலான மேற்கூரை அமைக்கும் பணி நடந்தது. இதனால் சிறுமி சத்தியா பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்ைல.
பின்னர் மதியம் வீட்டின் தரையில் பூசுவதற்காக அப்பகுதியில் இருந்து மாட்டு சாணத்தை சத்தியா கையில் எடுத்து வந்து கொடுத்தாள். இதனால் அசுத்தமாக இருந்த தனது கைகளை கழுவுவதற்காக சிறுமி அங்குள்ள மாநகராட்சி குடிநீர் தொட்டிக்கு சென்றாள்.
மின்சாரம் தாக்கி...
அங்கிருந்த இரும்பாலான குடிநீர் குழாயை சிறுமி திறக்க முயன்றாள். அப்போது அதில் மின்சாரம் பாய்ந்து இருந்ததால், சிறுமி சத்தியாவின் உடலில் மின்சாரம் தாக்கியது. இதில் அவள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சத்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சிறுமியின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
பராமரிப்பற்ற மோட்டார் அறை
இதற்கிடையே, சிறுமி இறந்த குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் அறைக்கு செல்லக்கூடிய மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ''மின்விபத்து நிகழ்ந்த குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் அறை பராமரிப்பற்று கதவு இ்ல்லாமல் திறந்தே கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் சரிசெய்யவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுமி சத்தியாவின் உயிர் பறிக்கப்பட்டு உள்ளது. பராமரிப்பற்ற மின்மோட்டார் அறையை உடனே சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று ஆவேசமாக தெரிவித்தனர்.