உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்ம சாவு

சங்கரன்கோவில் அருகே உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். அவள் அடித்துக்கொலை செய்யப்பட்டாளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-10 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். அவள் அடித்துக்கொலை செய்யப்பட்டாளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

5 வயது சிறுமி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் கீழ 1-ம் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களது மகள் மதுஷிகா (வயது 5). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்துவிட்டார்.

இதனால் இசக்கியம்மாள் மகளுடன் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பகுதியில் தனது அக்காள் வீடு அருகே மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். ேமலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு செல்லும்போது சிறுமியை உறவினர்களிடம் விட்டுச் செல்வது வழக்கம்.

ஆஸ்பத்திரியில் சாவு

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மதுஷிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக இசக்கியம்மாள் மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் இசக்கியம்மாள் வேலைக்கு சென்றார். அப்போது, அவரை செல்போனில் தொடர்பு ெகாண்ட உறவினர்கள் மதுஷிகாவுக்கு உடல்நிலை சரிஇல்லாததால் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அவர் அங்கு வந்தார். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிறுமி மதுஷிகா பரிதாபமாக இறந்தாள்.

அடித்துக் கொலையா?

ஆனால், இதுகுறித்து சிறுமியின் தந்தை மாடசாமியின் தரப்பினருக்கு தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்கள் கூறுகையில் 'சிறுமியின் உடலில் காயங்கள் இருக்கிறது. அவள் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அவளது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே, இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை

தொடர்ந்து போலீசார் கூறுகையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் அறிக்கை வந்த பின்னரே சிறுமி எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக மர்மசாவு என்று வழக்குப்பதிவு செய்து, இசக்கியம்மாள் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சங்கரன்கோவில் அருகே உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்