தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
கறம்பக்குடி அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கவுதமன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தங்கப்பொண்ணு. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தங்கப்பொண்ணு தனது வீட்டை பூட்டிவிட்டு மாமியார் விஜயலெட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் தங்கப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது திடுக்கிட்டு கண் விழித்த தங்கப்பொண்ணு சங்கிலியை பறிக்கவிடாமல் சத்தம் போட்டார். இதனால் பீதியடைந்த மர்ம ஆசாமிகள் தங்கப்பொண்ணுவை கீழே தள்ளிவிட்டு தாலி சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தங்கப்பொண்ணு சங்கிலியை இறுக பற்றி போராடியதால் 2 பவுன் தப்பியது. இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.